Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts
டிஸ்கி : இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. சுவாரஸ்யத்திற்காகவும், குஜல்டிக்காகவும்   சில   பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.
இதுவரை 
பாகம் 7

இனி ...

மறுநாள் ஜெஸ்ஸியின் வருகைக்காக காத்திருந்தேன். அவளுக்குப் பிடித்த வெள்ளை சுடிதாரில் வந்திருந்தாள். முதல் சந்திப்பு ஞாபகம் வந்தது. அப்பொழுதும் அதே வெள்ளை உடை. ஆனந்தமாக உணர்ந்தான் கார்த்தி. ஆனால் அவளது நடவடிக்கைகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. எப்பொழுதும் போலப் பேசினாள்.


ஒருவேளை மெஸேஜ் டெலிவர் ஆகாமல் போய் இருக்குமோ ? இல்லை மெஸேஜ் பார்க்க மறந்து இருப்பாளோ ? இல்லை வேண்டுமென்றே கிண்டல் செய்கிறாளா ? தலை வெடித்து விடும் போல் இருந்தது.

"மெஸேஜ் பார்த்தாயா ஜெஸ்ஸி ? " - நேரடியாக கேட்டே விட்டான்.

"எந்த மெஸேஜ் ?" - நக்கலோடு கேட்டாள்.

"நேத்து நைட் என்னோட நம்பர்ல இருந்து எந்த மெஸேஜும் வரலையா உனக்கு ?"

"ஓஹ்ஹ் .. அதுவா .. பார்த்தேன் பார்த்தேன் .. கொஞ்சம் இடம் கொடுத்தால் போதுமே, ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்க வேண்டியது .. " - முறைத்தாள்.

ஜெஸ்ஸி அப்படி சொல்லுவாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. முகத்தில் அறைந்தார் போல் இருந்தது. கொஞ்சம் யோசித்து அனுப்பி இருக்கலாமோ என்று எண்ணினான்.


"ஸாரி ஜெஸ்ஸி. தப்பா எதுவும் நினைக்கலையே ?"

"இதுல என்ன இருக்கு. நடக்கறது தான. இதுக்கு போய் ஸாரி எல்லாம் சொல்லிகிட்டு. ஃப்ரென்ட்ஸ்க்குள்ள ஸாரி எல்லாம் சொல்ல கூடாது" - கண் சிமிட்டினாள்.

காதலை கண்ணியதோடு நிராகரித்து நட்பு பாராட்டிய விதம் அவனை வெட்கித் தலைகுனிய வைத்தது. ச்சே .. அவசரப்பட்டு விட்டோமே என்று வருந்தினான். உன்னை கட்டிக்க போறவன் கொடுத்து வச்சவன் ஜெஸ்ஸி என்று நினைத்துக்கொண்டான்.

வருடங்கள் ஓடின. வேளை, ப்ரோமோசன், ஆன்சைட், அது, இது என்று வாழ்க்கை மாறியது. எனக்கும் ஜெஸ்ஸிக்கும் இடையேயான நட்பும் தொடர்ந்தது.  இதோ இன்று அவளுக்குத் திருமணம். பழைய நினைவுகளை முதல் பாகத்தில் இருந்து அசை போட்டபடி தூக்கம் வராமல் மண்டபத்தில் வெளியே உலவ ஆரம்பித்தேன்.

ஜெஸ்ஸி மணமகள் அறையிலிருந்து என்னை பார்த்தாள். அலங்கார வேலைகள் நடந்து கொண்டிருந்தது. என்னை வருமாறு கை அசைத்தாள்.

"என்னடா கார்த்தி .. தூங்கலையா நீ ?"

"தூக்கம் வரல"

"ஏன்டா சோகமா இருக்க? "

"அதெல்லாம் ஒன்னும் இல்லயே" .. சோகத்தை மறைக்க முயற்சி செய்தான்.

"உதைப்பேன். உன்னை பத்தி எனக்கு தெரியாதா. என்ன விசயம்னு சொல்லு".

"பெருசா எதுவும் இல்லை. இத்தனை நாள் கூடவே இருந்த. கல்யாணத்துக்கு அப்பறம் அதெல்லாம் எதிர் பார்க்க முடியாது. பொலம்பரத்துக்கும் ஆள் இருக்காது. அதான் பீலிங்க்ஸ்."


"இவ்வளோ தானா .. நீயும் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோ"

"நீ வேற. நமக்கு யாரு பொண்ணு தர போறா."

"உனக்கு என்னடா குறைச்சல். உன்னை கட்டிக்க கொடுத்து வச்சு இருக்கணும். நீ மட்டும் காலேஜ்ல ப்ரொபோஸ் பண்ணி இருந்தால், நான் ஓகே சொல்லி இருப்பேன்."  - சொல்லி விட்டு சிரித்தாள்.

அதிர்ந்தான் கார்த்தி. அதான் உன்னோட பிறந்த நாள் அன்றைக்கு மெஸேஜ் அனுப்பினேனே "I Love You".

"எப்போ பார்த்தாலும் கலாய்ச்சுக்கிட்டே இரு.  அன்னைக்கு மட்டும் உன்னோட மொபைல்ல இருந்து 20 மெஸேஜ் 15 மிஸ்ட் கால்ஸ் வந்துச்சு. விட்டா எல்லாத்தயும் லவ் பண்ண சொல்லுவ போல இருக்கே" .. மீண்டும் சிரித்தாள்.

உடைந்தே போனேன். பாழாய்ப்போன "I Love You" விளையாட்டு என் மொபைலில் அன்று நடந்தேறி இருக்கிறது. விளையாட்டு வினை ஆனதை அன்றைக்குத் தான் உணர்ந்தேன். ஜெஸ்ஸிக்கு இனிமேல் நடந்த விசயத்தை கூறி ஒன்றும் ஆகப்போறதில்லை. வெள்ளம் தலைக்கு மேல் எப்பவோ போயாயிற்று. வந்த ஆத்திரத்திற்கு ரூமில் தூங்கி கொண்டிருக்கும் ஜெய்யை போட்டு மிதிக்க வேண்டும் போல் இருந்தது.

ஜெய் ஏற்கனவே எழுந்திருந்தான்.

"என்ன மச்சி. உன் ஆளோட கல்யாணத்துக்கு முதல் ஆள கிளம்பி ரெடீ ஆயிட்ட போலிருக்கு. நேத்து நைட் தான் KTVல பூவே உனக்காக படம் போட்டாங்க. நீ ஏன்டா திருப்பி போட்டு காட்ற"

"உன் மேல செம கொலை வெறில இருக்கேன்.. ஓடிரு"

"ஒய் மச்சி .. எனி ப்ரோப்ளம் ? "


"நீ அனுப்பின மெஸேஜ்னால தாண்டா ஜெஸ்ஸி எனக்கு கிடைக்கல"

"எந்த மெஸேஜ் மச்சி ?"

"அவ பர்த்‌டே அன்னைக்கு நீ என்னோட மொபைல்ல இருந்து எதுவும் அனுப்பல ?"

"ஓஹ்ஹ் அதுவா.. நான் அப்போவே சொன்னேன் மச்சி , வெறும் மிஸ்ட் கால் மட்டும் கொடுக்கலாம்னு .. இந்த விக்கி பையன் தான் மெஸேஜ் அனுப்பிச்சான்"

தனக்கும் அதற்க்கும் எந்த ஒரு சம்பந்தம் இல்லை என்பதை போல் பார்த்தான் விக்கி.

"சரி விடு .. எல்லாம் கை மீறி போய்டுச்சு. இனிமேல் பேசி என்ன பிரயோஜனம்." கோபத்தை ஒருவராக அடக்கிக்கொண்டேன்.

"கோவிச்சுக்கிட்டியா மச்சி" - ஜெய் பாசமாகக்  கேட்டான்.

மௌனமாய் தலை ஆட்டினேன்.

"கோவிச்சுக்கோ கோவிச்சுக்கோ" - கலாய்த்து சிரித்தான்.

"உங்களை மாதிரி 4 பேர் இருக்கறதால தாண்டா நம்ம கிளாஸ்ல ஒரு லவ்வும் சக்ஸஸ் ஆக மாட்டேங்குது." சொல்லிக்கொண்டே ஜெய் மீது பாய்ந்தேன். பின்னாடியே அனைத்து கும்பலும் பொதுமாத்து போட பாய்ந்தது.

*******************************முற்றும் ************************************


சமர்ப்பணம்:- 

நன்றிகள்:-
  • என்னுள் எழுதும் ஆர்வத்தை விதைத்த Sarcasan மற்றும் கீதா.
  • பதிவுகளாக எழுதி வந்த எனக்கு சிறுகதை வடிவத்தை அறிமுகம் செய்து வைத்த GS.
  • அட்சய பாத்திரம் போல அள்ள அள்ள குறையாத நினைவுகளை கொடுத்த கல்லூரி நண்பர்கள்.
  • மெகா சீரியலுக்கு போட்டியாக ஒரு வருடம் எழுதாமல் இருந்த போதிலும், அடிக்கடி விசாரித்த நல்ல உள்ளங்கள். 
  • இறுதியாக எவ்வளோ கேவலமாக எழுதினாலும் அதையும் படித்து உற்சாகப்படுத்தும் "அந்த நாலு பேர்".
Read more ...
டிஸ்கி : இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. சுவாரஸ்யத்திற்காகவும், குஜல்டிக்காகவும்   சில   பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.
இதுவரை 
6. Karthik talks to Jessi
இனி .. கிளாஸ்ரூம் வெறிச்சோடி கிடந்தது... "பர்ஸ்ட் பீரியட் ப்ரீ போல .. ஒருத்தனும்  சொல்லலியே  .. அப்போ கேன்டீன் தான் போய் இருப்பானுங்க ..  எதுக்கும் கன்பர்ம் பண்ணிக்குவோம்..".. கிளாஸ் ரெப் பாலாஜிக்கு கால்  அடித்தான் ..

"எங்கடா இருக்கீங்க?"

"டேய் .. சீக்கிரம் டிபார்ட்மென்ட் செமினார் ஹால்க்கு வந்துடு.." -பாலாஜி

"எதுக்குடா ? போன வாரம் லேப் ப்ரோக்ராம்க்கு அவுட்புட் காட்டவா ?? "

" அதுக்கு இன்னும் M.E ஸ்டாஃப் யாரையும் உஷார் பண்ணல.. இது HOD வர சொல்லி  இருக்காங்க .. என்ன மேட்டர்ன்னு தெரில"

"மச்சி பேசாம எனக்கு ப்ராக்ஸி போட்டுடு"

"டேய் .. ஏற்கனவே ஜெய்க்கு வேற போடணும் .. தாங்காது .. சீக்கிரம் வந்து சேரு .."

பின் கதவு வழியாக சென்று கடைசி வரிசையில் அமர்ந்தான் கார்த்தி. "செமஸ்டர் எக்ஸாம்ஸ் எல்லாரும் எப்படி பண்ணி இருந்தீங்க ?" என்ற கேள்வியுடன் ஆரம்பித்தார் HOD. விஷயம் விளங்கிவிட்டது. செமஸ்டர் ரிசல்ட்ஸ். "ஒருத்தரும் படிக்கணும், பாஸ் ஆகணும் அப்படிங்கிற எண்ணத்துல வர்ற மாதிரி தெரியல. "Data Structures"ல  பாதி க்ளாஸ் காலி. இந்த லட்சணத்துல I.V ஒண்ணுதான் உங்களுக்கு குறைச்சல். எல்லாரும் படிச்சு 80% மேல வாங்குங்க, அதுக்கு அப்பறம் I.V போறத பத்தி யோசிக்கலாம். "


தனது தலைமையில் நடக்கவிருந்த முதல் I.V கலைந்து போனதை எண்ணி ஷராஃபத் வருந்திக்கொண்டிருக்க, 90% வாங்கிய ரஞ்சனி 83% வாங்கியதற்காக திட்டு வாங்கிக்கொண்டிருக்க, கார்த்தி தான் பெயில் ஆனதை பற்றி கவலை கொள்ளாமல், ஜெஸ்ஸிக்கு ஸீக்ரெட் ஃப்ரென்ட் கிப்ட் தர முடியவில்லையேயென ஆதங்கப்பட்டுக்கொண்டான்.

HOD தொடர்ந்தார். "இனிமேல் எல்லாருக்கும் ஈவ்னிங் 4 - 6 டிபார்ட்மெண்ட் லேப்ல 'ஸ்டடி ஹவர்ஸ்'. படிச்சத குரூப் லீடர் கிட்ட ஒப்பிசுட்டு தான் கிளம்பணும். பாலாஜி, குரூப் லிஸ்ட் ரெடி பண்ணி என்னோட டெஸ்க்ல வச்சுடு.  பசங்களுக்கு பொண்ணுங்களையும் பொண்ணுங்களுக்கு பசங்களையும் லீடரா போடு .. அப்போதான் ஏமாத்தமா ஒழுக்கமா படிப்பீங்க .. " .

பாலாஜி வழக்கம் போல ரோல் நம்பர் வரிசையில் குரூப் பிரிக்க, இம்முறையும் ஜெஸ்ஸி  தலைமையிலான குரூப்பில் கார்த்தி அண்ட் ஜெய்.

-----------------------------------------------------------------------------------------------------------------------

கடமையே என்று சிலர் , படிக்கும் சாக்கில் கடலையென சிலர் , வேண்டா வெறுப்பாக பலர் என்று சர்க்யூட் லேபில் க்ரூப் ஸ்டடி ஆரம்பம் ஆனது.

"ஜெஸ்ஸி நல்லா புரியர மாதிரி சூப்பரா சொல்லித்தரா இல்ல  .. மேடம் நடத்தும் போது ஒரு எழவும் விளங்கல"

"எப்படிடா விளங்கும் .. பாடத்த கவனிச்சாதான .. பாக்கறது பூரா அவள .. " - ஜெய் அலுத்துக்கொண்டான்.

"தம்பி, நீங்க மேடம பாக்கறதுக்கு நாங்க பாக்கறது எவளவோ தேவல"

"என்ன சொல்றாரு உங்க ல்ப லீடர்" - ஜெஸ்ஸி.

"நீ அவனைவிட நல்லா சொல்லித்தறியாம்.  தலைவர் சொல்றாரு" - நக்கலாய் சிரித்தான் கார்த்தி.

"அவரு பெரிய படிப்ஸ். படிக்காமலேயே பாஸ் பண்றவர். அதுவும் அவர் Tunneling சொல்லிகொடுத்த மாதிரியெல்லாம் எனக்கு நடத்தவே தெரியாது. அவரு முன்னாடியெல்லாம் நான் சும்மா". சொல்லிவிட்டு அவளும் சிரித்தாள்.


அவள் சிரிப்பில் ஆசிர்வதிக்கப்பட்டவனாய் உணர்ந்தான் கார்த்தி. ஜெய்யோ கார்த்தி போடும் கடலை கருகாமல் இருப்பதற்குத் தன்னை மணலாக உபயோகிப்பதைக் கண்டு எரிச்சல் அடைந்தான்.

"இப்படி படிக்காம பேசிட்டே இருந்த இந்த தடவையும் நீ பாஸ் ஆக மாட்ட கார்த்தி."

"பார்த்துட்டே இரு ஜெஸ்ஸி .. இந்த தடவ ஃபர்ஸ்ட் மார்க் வாங்கறேனா இல்லையானு."

அதை கேட்டவுடன் ஜெய்க்கு சிரிப்பு பீறிட்டுக்கொண்டு வந்தது .. ஜெஸ்ஸியும் உடன் சேர்ந்து சிரித்தாள்.

"என்ன மச்சான் இப்படி சிரிச்சு அசிங்கப்படுத்துற .. சிங்கள் பாஸ் அஸெம்ப்லர் ஒப்பிக்கவா ? பாக்கறியா ?"

"உனக்கு எவளோ சொல்லிக் கொடுத்தாலும் புரியாதுங்கற விஷயம் தெரிஞ்சும் அவ வெட்கமே இல்லாம சிரிக்கிறா. இதுல ஸார் ஃபர்ஸ்ட் மார்க் வேற வாங்க போறீங்க .. ஆல் தி பெஸ்ட்."

ஜெஸ்ஸியை இம்ப்ரெஸ் செய்வதற்கு இதை விட வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது. அதற்காகவே வெறித்தனமாக படித்தான் கார்த்தி. அனைவரும் எதிர்பார்த்தது போல் பாஸ் மட்டுமே ஆக முடிந்தது. தியரீ ஆஃப் கம்ப்யூடேசன் உட்பட 4 சப்ஜக்டில் பார்டர் பாஸ். ஜெஸ்ஸியின் பெயர் இரண்டாவது இடத்தில் இருந்தது.. முதலாவது மார்க் சாட்சாத் ஜெய். இட் வாஸ்  எ மெடிகல் மிராக்கிள்.

-----------------------------------------------------------------------------------------------------------------------

"பாஸ் ஆயிட்டோம்ல" - மெஸேஜ் தட்டினான்.

"ஹேய் .. சூப்பர் .. வாழ்த்துக்கள். ஃபர்ஸ்ட் மார்க் வாங்கறதா சொன்னீங்க?".

"இப்போ தான பாஸ் ஆக ஆரம்பிச்சு இருக்கோம். அடுத்த ஸெமெஸ்டர்ல வாங்கிடுவோம்"

"ஹி ஹி ஹி ... அது சரி .. பாஸ் ஆனதுக்கு ட்ரீட்?"

"குடுத்துட்டா போச்சு .. நாளைக்கு .. ஆல் சீசன்ஸ் .. 12.30 ஷார்ப்.. வந்துடு" .. ரீசார்ஜ் செய்தது போக ஜெய்க்கு தரவேண்டிய மீதம் 100 ரூபாய்யை பர்சில் பத்திரப்படுத்தினான்.

ட்ரீட் குடுக்கற மேட்டர சொன்னா ரொம்ப கலாய்பானுங்க. இவனுங்களையும் கூட்டிட்டு போலாம்னு பார்த்தா காசும் இல்ல. அப்படியே இருந்தாலும் அங்க வந்து நம்மள ப்ரீயா பேச விட மாட்டானுங்க. இத்தகைய சிந்தைனைகள் தோன்ற சீக்கிரமா எழும்பி கிளம்பினான். காதல் வந்தால் அனைத்தும் தலைகீழ் தான்.11 மணிக்கு கல்லூரிக்குப் போகும் கார்த்தி இன்றோ 12.15 மணிக்கெல்லாம் ஆல் சீசன்ஸ் வாசலில்.காத்திருந்த காலம் எல்லாம் செல்போன் வருகைக்கு பின்னர் காணாமல் போனது. "wru" மெஸேஜ் பறந்தது. 5 நிமிடத்தில் ஜெஸ்ஸியும் வந்து சேர்ந்தாள்.

ஆல் சீசன்ஸ் காஸ்ட்லீ ஹோட்டல் என்பதால் கூட்டம் ஜாஸ்தி இருப்பதில்லை. ட்ரீட் கொடுக்க வரும் கும்பல் தான் சற்று அதிகம். ஒரு இடம் தேடி அமர்ந்தார்கள்.

"எனக்கு என்ன கார்த்தி வாங்கி தர?"

"என்கிட்ட இருக்கற 100 ரூபாய்க்கு 2 மீல்ஸ் தான் சாப்பிட முடியும்"

"ஹி ஹி .. ஹ்யூமரஸ் .. இது தான் உன்கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு"

"அப்படியா.. அப்போ அந்த 100 ரூபாய்யும் என்னோடது இல்ல. ஜெய்யோடது"

"ஹி ஹி ஹி ஹி .. வெரி funny .."

கார்த்தி அடித்த மொக்கை ஜோக்குக்கெல்லாம் சிரித்தாள். அவள் உண்மையாகவே ரசிக்கிறாளா அல்லது நடிக்கிறாளா .. புரிந்துகொள்ள முயற்சி செய்வது வீண் வேலையென்று தோன்றியது. இதே ஜோக்கை ஒருமுறை ஜெய்யிடம் சொல்லி அடி வாங்கியது நினைவில் வந்து மறைந்தது.

சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்து பேசிக்கொண்டிருக்கையில் செல்போன் ஒலித்தது.

ஜெய் காலிங்க்.

"சொல்றா"

"எங்க மச்சான் இருக்க?"

கழுகுக்கு மூக்கு அதுக்குள்ளயும் வேர்த்துடுச்சு. "RS புறம்ல." ஜெஸ்ஸிக்கு கேட்காதவறு. வெங்கடாபுரத்தில் இருந்துகொண்டு.

"அப்படியா. அங்கயே இரு. நாங்களும் அங்க தான் வர்றோம். போர் போர்ன் ஐஸ் க்ரீம் கூப்பன் ஓசி கிடைச்சு இருக்கு"

"இல்ல மச்சான். நான் அங்க இருந்து சாய்பாபா காலனி கிட்ட வந்துட்டேன். SBI ATM கிட்ட இருக்கேன். நீங்க போய்ட்டு வாங்க." சமாளித்தான்.

"அப்படியா. நாங்களும் அங்க தான் இருக்கோம்.  கொஞ்சம் ரோட்டுக்கு இந்த பக்கம் பாரு. "


ஜெய்யும் விக்கியும் நக்கலாய் சிரித்து கொண்டிருந்தார்கள். கையும் களவுமாக மாட்டிக்கொண்டதை எண்ணி கூச்சப்பட்டான் கார்த்தி.

"சரி சரி .. வழியாத .. நீ நடத்து" .. போனை கட் செய்தான்.

"பாசமா விட்டுட்டு போறான். நல்லததுக்கா கெட்டதுக்கான்னு தெரியலயே. சமாளிப்போம்".

-------------------------------------------------------------------------------------------------------------------------

"என்னடா நடக்குது உங்களுக்குள்ள".. சாயங்காலம் ஹாஸ்டலில் தூண்டில் போட்டான் ஜெய்.

"ஒன்னும் இல்ல மச்சி .. பாஸ் ஆனதுக்கு ட்ரீட் கேட்டா .. கொடுத்தேன் .. அவளோதான். "

"ஏன்டா !@#$. எக்ஸாம்க்கு முன்னாடி படிச்சு கதை சொன்னது நானு. ட்ரீட் மட்டும் அவளுக்கா .. !@#!@$!@$@!"

"விட்றா விட்றா .. ட்ரீட் தான வச்சுட்டா போச்சு"

அடுத்த மாதம் திருப்பி தருவதாய் கூறி ஜெய் செலவில் அன்று இரவே சரக்கு ட்ரீட் ஏற்பாடு செய்தான். சில பல ரவுண்டுகள் உள்ளே சென்றதில் "மச்சி .. உனக்கு அவள எவ்வளோ புடிக்கும்" என்று ஜெய் கேட்க போதையில் அவனும் "இவ்வளோளோளோளோளோ" என்று உளறி மாட்டிக்கொண்டான்.

"அதான் புடிச்சு இருக்குல. போய் சொல்ல வேண்டிதான"

"லவ் எல்லாம் இல்லடா .. வெறும் நட்பு மட்டும் தான்". ஆனா வேலை கிடைச்ச உடனே சொல்லிடுவேன் மச்சி என்று மனதிற்குள் கூறிக்கொண்டான்.

அன்றிலிருந்து அவள் வரும்போதெல்லாம் இதை சொல்லி கிண்டல் செய்வது வழக்கமான ஒன்றானது. இவ்வாறாக ஜாலியாக போய்க்கொண்டிருந்த ஸ்டடி ஹவர்சில் எவனோ ஒரு !@#!$! 1.5GB RAM ஆசைப்பட்டு திருடியதில், "நீங்க படிச்சு கிழிச்சது போதும்" என்று ஸ்டடி ஹவர்ஸ் முடிவுக்கு வந்தது. இந்த செய்தி கார்த்தி மட்டுமல்லாது ஸ்டடி ஹவர்சில் கடலை வருத்த பலருக்கும் வருத்தத்தை தந்தது.


-----------------------------------------------------------------------------------------------------------------------

ஜெஸ்ஸிக்கு முதல் கம்பெனியிலேயே வேலை கிடைத்தது. கார்த்தி முதலில் வந்த ஓரிரண்டு கம்பெனிகளை தவறவிட்டாலும் ஒருவழியாக முட்டிமோதி மூன்றாவதில் வேலை கிடைத்தது. வேலையில்லாத சமயங்களில் ஜெஸ்ஸி மிகவும் ஆறுதல் கூறி தெம்பு ஊட்டினாள்.  உற்சாகப்படுத்தினாள். அவர்களுக்குள் இருந்த நெருக்கம் இன்னும் அதிகமானது. காதலை சொல்ல தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அடுத்த வாரத்தில் ஜெஸ்ஸியின் பிறந்தநாள் வருவது நினைவில் வந்தது. காதலை பரிசாக கொடுக்க இதை விட நல்ல சந்தர்ப்பம் அமையாது.


காத்திருந்த நாளும் நெருங்கிக்கொண்டிருந்தது. 11.30. அரை மணி நேர காத்திருப்பு. காதலிக்க ஆரம்பித்ததில் இருந்து காத்திருத்தல் சுகமான ஒன்றாகவே தெரிந்தது. கவித்துவமாக காதலை சொல்லி ஆச்சரியப்படுத்த வேண்டும். மூளையை கசக்கி எழுதிக்கொண்டிருக்கையில் செல்போன் அழைத்தது - "JAI DAD CALLING".  சுவாரசியமாக பக்கத்து ரூமில் மொக்கை போட்டுக்கொண்டிருந்த அவனிடம் கொடுத்துவிட்டு, விட்ட இடத்திலிருந்து எழுத்த ஆரம்பித்தான்.

எழுதி முடிக்கையில் மணி 12.05 கடந்திருந்தது. போன் செய்து விஷயத்தை சொல்ல வெட்கமாக இருந்தது. மெஸேஜ் தான் சிறந்தது என்று முடிவு செய்து பக்கத்து ரூமிலிருந்த ஜெய்யிடம் போனை வாங்கி வந்து பொறுமையாக டைப் அடித்தான். ஒரு வேலை ஃபார்வர்ட் மெஸேஜ்ன்னு நெனச்சு டெலீட் பண்ணிட்டா என்ன பண்றது ? யோசித்தான். கவிதையை நாளை நேரில் வாசித்து அசத்திவிடலாம். இப்போதைக்கு அளவாக "I love you" மட்டும் அனுப்பினான். ஒரு பதிலும் இல்லை. போன் பண்ணலாம் என்றால் வெட்கம் இடைமறித்து.

உதிக்கின்ற சூரியன் உறங்கும் வேலையில், உங்கள் இல்லம் தேடி வரும் இனிய இரவு வணக்கங்களுடன் நான் உங்கள் லக்ஷ்மி நாராயணன். சூரியன் F.M இல் அடுத்து வரும் பாடல் இசைஞானி இளையராஜா மெல்லிசையில் "பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா"

எப்படியும் பதில் வரும் என்னும் நம்பிக்கையில் இளையராஜா இசையோடு தூங்கிப்போனான்.

Read more ...
டிஸ்கி : இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. சுவாரஸ்யத்திற்காகவும், குஜல்டிக்காகவும்   சில   பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.

இதுவரை ...

இனி ...
6. Karthik talks to Jessi.
மந்தமாய்  சென்றுகொண்டிருந்த அந்த செமஸ்டர் களைகட்ட துவங்கியது Secret Friends என்ற விளையாட்டு ஆரம்பித்த போதுதான்  . Secret Friends -  ஏதோ ஒரு சீனியர் ஆரம்பித்து வைத்த விளையாட்டு, இன்றைக்கும் மரபு மாறாமல் தொடர்ந்து நடைபெற்றுகொண்டிருகிறது. விளையாட்டின் விதிமுறை என்னவெனில் எல்லாரோட பேரையும் எழுதி சீட்டு குலுக்கி போட்டு, பசங்க பொண்ணுங்க சீட்டையும், பொண்ணுங்க பசங்களோட சீட்டையும் ஆளுக்கு ஒரு சீட்டை எடுக்க வேண்டும். அந்த சீட்டில் இருக்கும் நபர் தான் இவருக்கு Secret Friend. இன்னார்க்கு இன்னார் தான் Secret Friend என்பது அப்போது தெரியாது. அவ்வபோது Secret Friend விளையாட்டாக செய்ய சொல்லும் செயல்களை எல்லாம் செய்ய வேண்டும். கடைசியில் ஒரு சுபயோக சுபதினத்தில் Gift வாங்கி கொடுத்து நான்தான் அந்த Secret Friend என்று பரஸ்பர அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். மரபு படி அந்த தினம் செகண்ட் இயர் Industrial Visit என்று எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் இது ஒரு 'வாங்க பழகலாம்' விளையாட்டு. புடிச்சு இருக்கா லவ் பண்ணிக்குவோம், புடிக்கலையா கடைசி வரைக்கும் ப்ரன்ட்ஸாவே இருப்போம்.

ஒரு புறம் கடலையை/காதலை வளர்க்கும் முயற்சி என்று தோன்றினாலும்,பல்வேறு கலாச்சார பின்னணியில் இருந்த வந்த பொண்ணும் பையனும் தங்களுக்குள் இருக்கும் தயக்கத்தையும் சங்கோச்சதையும் களைந்தெறியும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்பட்டது. ஏற்கனவே தாவணி கூட்டம் அதிகம் இருப்பதால் மற்ற department புகைந்து கொண்டிருக்க, இத்தகைய விளையாட்டு அவர்களை மேலும் பொறமை அடைய வைத்தது.

Attendance ஆர்டரில் Secret Friend தேர்வு நடந்தேறிக் கொண்டிருந்தது. சீட்டை எடுத்து பெயரை பார்த்தவர்களிடம் மகிழ்ச்சி, துக்கம், வேதனை , சாதனை என பல்வேறு முகபாவனைகளை ஒரே நேரத்தில் காண அன்று சந்தர்பம் கிடைத்தது. எனக்கு எழுதி வைத்தாற்போல் ஜெஸ்ஸியின் பெயரே வந்தது. வராத பின்னே, எழுதி எடுத்துக் கொண்டுபோனதே நான் தானே. சந்தர்பத்திற்காக காத்திருப்பதை விட அதை உருவாக்குவதே வெற்றியின் அடையாளம் என்று எங்கோ படித்தது. மாத இறுதியில் Industrial Visit ஊட்டி செல்வதாக ப்ளான் போடப்பட்டது. கொடுக்கபோற கிப்ட்ல ஜெஸ்ஸி அசந்து போகணும் என்று எண்ணிக்கொண்டேன்

"இது எல்லாம் வேலைக்கே ஆகாது மச்சி". - சீட்டை பார்த்துவிட்டு நொந்துகொண்டே சொன்னான் ஜெய். அநேகமாக அவனை வைத்து கலாய்க்கும் பெண்ணின் பெயர் வந்திருக்க கூடும். ஜெய்க்கு இதில் விருப்பம் இல்லையென்றாலும், வேறு வழியில்லாமல் ஒத்துகொள்ள வேண்டிய கட்டாயம்.

"உனக்கு யாரு பேருடா வந்து இருக்கு ??"

"ஜெஸ்ஸி மச்சி" ..வழக்கமான வழிதலுடன்.

சுத்தம். உன்னை திருத்த முடியாது.



"உனக்குடா" - இது விக்கியிடம்.

"மச்சி .. எனக்கு &^#$&$* பேரு வந்திருக்குடா":.மழைக்காக ஏங்கி இருக்கும் பயிரை போல சொன்னான். பாய்ஸ் ஸ்கூலில் படித்த ஏக்கம் அவன் கண்களில் தெரிந்தது.

அந்த காலகட்டத்தில் உருவானது தான் இந்த LBA - [ Last Bench Association ]. பொதுவா கடலை விசயத்தில் மாணவர்களை மூணு வகையான பிரிக்கலாம்.

  1. போடுவது கடலை என்பதே தெரியாமல் கடலை போடுபவர்கள்,
  2. தெரிந்தே கடலை போடுபவர்கள்,
  3. கடலை போட இயலாதவர்கள். அந்த இயலாமைக்கு அவர்கள் வைத்த கொண்ட பெயர் 'கெத்து'.

அத்தகைய மூன்றாவது வகையை அதிகபட்ச உறுப்பினர்களாக கொண்ட குழு தான் இந்த LBA. பல கிளாஸ்ரூம் சீர்திருத்த கொள்கைகளை கொண்டிருந்தாலும், அதன் முக்கிய குறிக்கோள் , கடலை போடுபவர்களை கலாய்ப்பது.

ஸ்வாரசியமாக கழிந்த நாட்கள் அவை. எப்போடா இண்டர்வல் வரும், இன்னைக்கு யாரு என்ன பண்ண போறாங்க என்று எதிர்பார்த்திருந்த தருணங்கள். அவ்வபோது கிளாஸ் நடுவில் துண்டு சீட்டில் தகவல் பரிமாற்றம் நடக்கும்.

"ஜெய் அடுத்த பீரியட் பர்ஸ்ட் பெஞ்சில் உக்காரவும்"
"விக்கிக்கு LIC லேபில் கிராப் வரைந்து தரவும். தவறினால் பைவ் ஸ்டார் வாங்கித்தரவும்."

நானும் என் பங்கிற்கு ஜெஸ்ஸியிடம் தூது விட்டுகொண்டிருந்தேன்,

"இன்டர்வலில் மேடை ஏறி பாடவும்".
"சிவப்பு / வெள்ளை / மஞ்சள் சுடிதாரில் பார்க்க ஆசை".

LBA தன் பங்கிற்கு பணிகளை செய்து கொண்டிருந்தது-

"முருகேசன் பொண்டாட்டி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்"
"6 மணிக்கு ஆடிடோரியம் முன்னால் சந்திக்கவும் . தீபாவளி பரிசு காத்திருகிறது"

என்று அவ்வபோது சர்ச்சைகளை உண்டு பண்ணினாலும், மகளிர் அணி சமாதானம் ஆகிவிட விளையாட்டு தொடர்ந்தது. சில நேரங்களில் சந்தர்பத்தை எனக்கு சாதகமாகவும் உபயோகித்து கொண்டேன் -

"கார்த்தியிடம் அலைபாயுதே டயலாக் சொல்லவும். இல்லாவிடில்
(Temptation)டெம்ப்டேசன் வாங்கித்தரவும்".

அன்றைய காலத்தின் விலை உயர்ந்த சாக்லேட் வரிசையில் ஒன்றுதான் இந்த டெம்ப்டேசன்.பெண்களின் கோபத்தையும், அழுகையையும் சமாதனம் செய்யகூடிய விசேஷ பொருள்.கூடவே ஒரு மன்னிப்பு. நொடியில் சிரிப்பு மலரும், தவறுகள் மன்னிக்கப்படும், காதலில் ஆசிர்வதிகப்படுவதற்கான வாய்ப்புகள் கூட உண்டாகலாம். ஐம்பது ருபாய். வசந்தி பேக்கிரி பக்கதுல இருக்கிற "ஆசை டிபார்ட்மெண்டல்" ஸ்டோர்ல கிடைக்கும். . யாரு இதெற்கெல்லாம் ஐம்பது ருபாய் செலவழிக்க போறா.. எப்படியும் நம்மகிட்ட வந்து பேசித்தான் ஆகணும். மனக்கோட்டை கட்டிக்கொண்டிருந்த நான், அவள் சாக்லேட்டுடன் வருவாள் என்று சற்றும் எதிர்பார்கவில்லை.

டெம்ப்டேசனிற்கு நடந்துகொண்டிருந்த அடிதடியில் கலந்து கொள்ள விருப்பமில்லாதவனாய், குழப்பத்தில் தத்தளித்தான். இனியும் குழம்பி பிரயோஜனமில்லை .. நேர்ல கேட்டுற வேண்டியதுதான்..மெசேஜ் தட்டினான்.

"எதுக்கு இவ்வளோ காஸ்ட்லியா ?"

"Secret Friendதான் கொடுக்க சொன்னாரு ... "

"அவன் ஆயிரம் சொல்லுவான். அதுக்குனு நீயும் செஞ்சுடுவியா ? நாளைக்கு என்னோட Secret Friend அதே Temptation வேணும்னு சொன்னா காசுக்கு நான் எங்க போறது, நீயா வாங்கி கொடுப்ப ??"

"இல்ல.. உன்கிட்ட அலைபாயுதே டயலாக் சொல்ல சொன்னங்க.. சொன்னா எங்க நீ தப்பா எடுத்துகுவியோனுதான், சாக்லேட் வாங்கி குடுத்துட்டேன்". "நான் ஏன் தப்பா நெனைக்க போறேன்?"

"இல்ல .. நீ மொதல்ல மாதிரி இப்போ என்கிட்டே பேசறது இல்ல .. அன்னிக்கு பேங்க்ல பார்த்து சிரிச்சப்போ கூட நீ சுத்தமா கண்டுகல. அதான்".

"அட .. என்ன ஒரு முட்டாள் நான்.. வேற யாரையோ பார்த்து சிரித்து இருந்தாலும் இருப்பாள், என்னை பார்த்து மட்டும் இருக்காது என்று ஏன் அன்று எண்ணினேன் ... கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் , எவ்வளோ உண்மையான வரிகள்"

"ச்சே ச்சே .. அப்படி எல்லாம் இல்ல ..கவனிக்காம இருந்திருப்பேன் ..எனிவேய்ஸ் மன்னிச்சுரு .. " 

"Apology Accepted  :-)" 
ஒற்றை வரியில் ரிப்ளை வந்தால் இது தான் பிரச்சனை. பேச்சை முடித்து விட்டாளா? இல்லையா? என்று தெரியாத இரண்டும்கெட்டான் நிலை .. 10 நிமிடத்தில் எத்தனை முறை மெசேஜ் எடுத்து பார்த்தான் என்று தெரியவில்லை .. மெசேஜ் டைப் பண்ணுவதும் டெலீட் பண்ணுவதுமாக ஒரு 10 நிமிடம். எதுவும் வரவில்லை ..

"மச்சான் Ghee rice டா .. லேட்டா போனா சிப்ஸ் இருக்காது" - ஜெய் கூப்பிட தட்டை எடுத்துக்கொண்டு ஓடினான்.

----------------------------------------------------------------------------------------

சாப்பிட்டுவிட்டு, சீனியர் ஸ்பான்சரில் ஓசி டீ குடித்துவிட்டு, பொறுமையாக ரூமிற்கு வந்தவன் வீட்டிற்கு கால் பண்ண மொபைல் எடுத்தபொழுது அந்த மெசேஜ் வந்தது

"Had dinner ????" - ஜெஸ்ஸி.

ஒரே பரவசம் .. கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்துவிட்டது.

"Done. Ghee Rice. Anga?" -கார்த்தி.

"பசங்க குடுத்து வச்சவுங்க .. நல்ல நல்ல சாப்பாடா போடறாங்க .. இங்க நூட்லஸ்"

"பொண்ணுக ஹாஸ்டல்ல அது கூட நல்ல இருக்கும்னு சொன்னங்க".

"யாரு சொன்னது வாயில வைக்க முடியாது .. அவளோ கேவலமா இருக்கும்."

"எங்க சொல்றது தான் அப்படி. ஆனா எல்லாரையும் பார்த்த டெய்லி புல் மீல்ஸ் சாப்பிடுற மாதிரில இருக்கீங்க." :-)

ஹ்ம்ம் ... அப்பறம் ??

"ஹ்ம்ம்","அப்பறம்"  - இதன் அர்த்தம் - உன்னிடம் பேச வேண்டும், ஆனால் பேசுவதற்கு விஷயம் ஒன்றுமில்லை. இருந்தாலும் பேச வேண்டும். பழம் பழுக்காவிட்டாலும் புகை போட்டாவது பழுக்க வைக்க யோசித்து கொண்டிருந்த கார்த்திக்கு , பழம் நழுவி பாலில் விழுந்த கதையாகிவிட்டது.

எதிர்த்த வீட்டு சாந்தி அக்காவின் நாயில் ஆரம்பித்த பேச்சு, ஒபாமா ஈரானின் மேல் போர் தொடுத்தது சரியா தவறா என்பதையும் தாண்டி போய் கொண்டிருந்தது..அர்த்தமற்ற பேச்சுக்கள் அதிகம் முக்கியத்துவம் அடைவது எதிர் பாலினத்திடம் மட்டும் தான் போலும். சங்கீத ஸ்வரங்கள் ஆரம்பித்துவிட்டன. 100 மெசேஜ் தாண்டியதும் காசை பிடுங்கும் ஏர்டெல் தான் கார்த்தியின் தற்போதைய ஒரே எதிரி. அன்றைய காதலர்களின் ஒரே எதிரியும் கூட.

நட்பு யாருக்கும் தெரியாமல் செல்லிடபேசியில் வளர்ந்து கொண்டிருந்தது. காலெண்டரில் அன்றைய தேதி கிழிக்கும் போது தான் ஞாபகம் வந்தது..அதுக்குள்ளையும் 29 ஆயுடுச்சா. இன்னும் கிப்ட் வாங்கவே இல்லையே. கொடுக்கப்போற கிப்ட்ல ஜெஸ்ஸி அசந்து போகணும். கிழித்த அவசரத்தில் அதில் எழுதிருந்த பழமொழியை வாசிக்காமல் காலேஜ் புறப்பட்டு சென்றான்.

அதில் எழுதியிருந்தது ,

"தான் ஒன்று நினைக்க கடவுள் ஒன்று நினைப்பார்."

தொடரும்.. 

Technorati Tags :  ,     ,   
Read more ...

டிஸ்கி : இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. சுவாரஸ்யத்திற்காகவும், குஜல்டிக்காகவும் சில பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.

5. Jessi is driving me Crazy

அந்த ராக்கி கட்டப்பட்ட கைகளுக்கு சொந்தக்காரன்,எனக்கு அருகில் அமர்ந்து இருக்கும் ஜெகநாதன் என்று நீங்கள் யூகித்து இருந்தால், பாராட்டப்பட வேண்டிய வாசகர்கள்தான். இன்றைய சமூக சூழலில் ராக்கி கட்டுதல் ஒரு தற்காப்பு கலையாகவே மாறிவிட்டது. நல்ல வேளை கைக்கு வந்தது, அடுத்தவன் கையோட போச்சு.

ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த செகண்ட் செமஸ்டர் ஒரு வழியாக முடிவிற்கு வந்தது. இப்போ தான், யார் யார்க்கு எந்த எந்த பேப்பர்ல போகும் என பசங்களும், பத்து மார்க் கொஸ்டின் மாத்தி எழுதியதற்காக பொண்ணுங்களும் பீல் பண்ணிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு அதுக்குள்ளையும் ஒரு மாசம் ஓடிருச்சா ? செமஸ்டர் லீவ் முடிந்து திரும்பிய கார்த்தியால் நம்ப முடியவில்லை. 

பர்ஸ்ட் இயர்கும் செகண்ட் இயர்க்கும் தான் எவ்வளோ மாற்றங்கள், வித்தியாசங்கள், ஏற்றதாழ்வுகள். தாத்தாவின் கட்டுபாடுகள் அற்ற வாழ்கை,  பிரைவேட் மெஸ்ஸில் இருந்து விடுதலை, சீனியர் என்ற கர்வம், இவ்வாறு பல எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்க, 'பவானி' - ரூம் நம்பர் 222 நோக்கி நடந்தான்.

Bhavani - 2nd year hostel. Pic Courtesy - Pradeep Palakad.


லோகேஷிற்கும், விஜய்க்கும் முதல் முறையாக மீசை மழிக்கும் சடங்கு வலுகட்டாயமாக ஒருபுறம் நடந்தேறிக் கொண்டிருக்க, மறுபுறம் பிரைவேட் பிடியில் சிக்கி ருசியை மறந்த எங்கள் நாவிற்கு ஒரே வரப்ரசாதம் -சிப்ஸ் உடன் கூடிய Ghee rice என்று அழைக்கப்படும் நெய் சாதம் கவர்மன்ட் மெஸ்ஸில் தயாராகி கொண்டிருந்தது. எல்லாம் மாறி இருந்தது. இரண்டை தவிர
  1. அதே சுத்தம் செய்யப்படாத கழிவறைகள்.
  2. அதே ரூம்மேட்ஸ்.
"என்னடா !! புது மொபைல் ஆஹ்?" கேட்டுகொண்டே உள்ளே நுழைந்தான்.

"நம்ம முருகனோடது மச்சான், பயபுள்ள குளிச்சுட்டு இருக்கான். அதான் கேம் விளையாடிட்டு இருக்கோம்." - ஜெய்.

அந்த ஓட்ட மொபைல்ல அப்படி என்னத்த இத்தனை பேரும் சேர்ந்து ஆர்வமா விளையடரானுங்க, சந்தேகத்தோடு சபையில் அமர்ந்தேன்.

"ஐ லவ் யு" என்று டைப் செய்து நம்பர் என்ட்டர் செய்தான்.

டேய் இது நம்ம கிளாஸ் பொண்ணு நம்பர் ஆச்சே?? மவனே மாட்டினோம், சங்கு தான்.

"சும்மா விளையாட்டுக்கு தான் மச்சி."

உனக்கு எல்லாமே விளையாட்டுதான்.

"பொண்ணு நம்ம EEE பையனோட ஸ்கூல் தான். தெரிஞ்ச பொண்ணுதான். பிரச்சனை எல்லாம் ஆகாது." சமாதனம் சொன்னான் ஜெய்.

"நீ எப்போடா ஊர்ல இருந்து வந்த?" ஈரம் சொட்ட சொட்ட இடுப்பில் துண்டோடு வந்தான் முருகன்.

"அவன் வந்தது இருக்கட்டும், உனக்கு ஏதோ கால் வருது மச்சி"- ஜெய்.

"இவ எதுக்குடா எனக்கு கால் பண்றா ?? ஹலோ . ஹ்ம்ம் சொல்லு"

*&#@&#*@%$

"இல்ல.."

!@#$#$@#%@#

"அது வந்து.. நான்"

*#&@$@#&#$

"இல்ல".
---------- The number you are trying to reach is currently switched off.

"எவண்டா மெசேஜ் அனுப்பினது? எந்த *@#&!$# அனுப்பினது ??"

சமாதனம் பண்ணுவதற்குள் போதும் போதும்னு ஆயிடுச்சு. பின்னர் கிளாஸ்மேட்டை அனுப்பி அவளையும் சமாதனம் செய்து பிரச்சனை முடிவிற்கு வந்தாலும், அவ்வபோது கிடைக்கிற மொபைல்ல இருந்து கிடைக்கற நம்பர்க்கு அந்த மூன்றெழுத்து மெசேஜ் அனுப்புற பழக்கம் மட்டும் ஓய்ந்த பாடில்லை. பொண்ணுங்களும் இதுங்க திருந்தாத ஜென்மம்னு பெருசா எடுத்துக்கறது கிடையாது.

என்னோட மொபைல்ல இருந்து இப்படி ஒரு மெசேஜ் எவனாச்சும் ஜெஸ்ஸிக்கு அனுப்பமட்டனான்னு ஏங்கிய காலங்கள் எல்லாம் உண்டு. ஜெஸ்ஸி மேல இருக்கற பயமா, இல்ல எங்க எனக்கு செட் ஆயிடுமோ அப்டிங்கற நல்ல எண்ணமா தெரில, ஒருத்தனும் அனுப்ப மாட்டான்.


ஜெஸ்ஸின்னு சொன்ன உடனே தான் ஞாபகம் வருது. பார்த்து 1 மாசம் ஆச்சு. சீக்கிரம் குளிச்சுட்டு திருநீர் சகிதம் ரெடி ஆகி தேவதையின் தரிசனம் காண கிளாஸ் கிளம்பினேன். வழக்கம் போல் பின்னணி இசையுடன் நுழைந்தாள் என்னவள்.

"ஜெஸ்ஸி கொஞ்சம் சதை போட்டு இருக்கால" சும்மா இல்லாத என் வாய் ஜெய்யிடம் உளறியது.

"நீ ஏன் அவள பத்தியே பேசற.. உன்னோட போக்கு சரி இல்லையே. விளையாட்டுக்கு ஓட்றத எல்லாம் சீரியஸ்ஸா எடுத்துக்காத மச்சி .. பியுச்சர்ல பீல் பண்ணுவ"

"இல்ல மச்சான்.. செம் லீவ்ல எனக்கு குட் மார்னிங், குட் நைட் மெசேஜ் எல்லாம் அனுபிச்சாடா"

"உனக்கு மட்டும் இல்ல, நம்ம கிளாஸ்ல இருக்கிற எல்லாத்துக்கும் தான் அனுப்பி இருக்கா. ஓவரா பீல் பண்றத விட்டுட்டு கிளாஸ்ஸ கவனிக்கற மாதிரி நடி. இல்லாட்டி வெங்கி தாத்தா வெளியில அனுப்பிடுவாரு. ஏற்கனவே அட்டன்டன்ஸ் கம்மி. "

எவளோ நாள் தான் பேசாம பார்த்துகிட்டே இருக்கறது.காதலில் காத்திருப்பது சுகம் தான் என்றாலும் ஒரு தலை காதலில் அது வேதனையாகவே தெரிந்தது. எப்படி பேச்சை ஆரம்பிகிறது, என்னத்த பேசறது ? விருப்பப்படும் அனைவரும் ஏதோ ஒரு சந்தர்பத்தில் பேச நேர்ந்து விடுகிறது. சாமர்த்தியசாலி சந்தர்பத்தை காதலாய் மாற்றுகிறான், ஏமாந்தவன் அண்ணனாகவோ, ரீசார்ஜ், செய்யும் நண்பனாகவோ மாறுகிறான். இது இரு பாலருக்கும் பொருந்தும். அத்தகைய சந்தர்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தேன்.. அது வெகு தொலைவில் இல்லையென்பது வரும் நாட்களில் தெரிந்தது .. 


தொடரும்..


Technorati Tags :  ,     ,  

Read more ...
டிஸ்கி : இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. சுவாரஸ்யத்திற்காகவும், குஜல்டிக்காகவும் சில பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.

இதுவரை ...

3.KARTHICK TALKS TO JESSI

இனி ...

4. ஐ டோன்ட் வான்ட் டு பி யுவர் பிரதர் ஜெஸ்ஸி !!!

"ஓடிப்போலாமா ???" 

இதனை சற்றும் எதிர்பாராத ஜெஸ்ஸி, எதுவும் சொல்லாமல் கோபமாக வகுப்பறையை விட்டு வெளியேறினாள். ஜெகநாதனும், முகமதுவும் தங்களுக்கு இடையே நடந்த  பெட்டிங் விளையாட்டு இப்படி வினையில் போய் முடியும் என்று நினைத்து இருக்க மாட்டார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் ஜெகநாதணிற்கு சீனியரிடம் இருந்து அழைப்பு வந்தது. திரும்பி வந்தவன் மிரட்டி அனுப்பியதாக மட்டும் கூறினான். அடி விழுந்ததா இல்லையா, அவனுக்கு மட்டுமே வெளிச்சம்.

விளையாட்டுன்னு தெரிஞ்சும் ஜெஸ்ஸி அப்படி பண்ணி இருக்க கூடாது தான்.  இருந்தாலும் ஒரு பொண்ணுகிட்ட போய் இப்படியா கேட்கறது, அப்படின்னு நீங்க நினைக்கிற மாதிரிதான் நானும் நெனச்சேன்.. ஆனா திமிரு , பசங்க , கெத்து , ரோஷம் , மரியாதை அப்படி இப்படின்னு என்ன என்னவோ பேசி ஜெய் எங்களை பிரைன் வாஷ் பண்ணிட்டான்.. 

ஒரு "ஓடிப்போலாமாவில்" இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கு என்றால் "ஐ லவ் யு " மட்டும் சொல்லி இருந்தால் ?? நினைச்சு பார்க்கவே பயமாக இருந்தது.. நமக்கும் இது ஒத்துவராத மாதிரி தான் தோணுது என்று எண்ணத் தொடங்கினான் கார்த்திக். பசங்க கிட்ட இது தான் ஒரு பிரச்சனை .. எதையுமே தெரிஞ்சுக்காம தாங்களே ஒரு முடிவு பண்ணிட்டு அதுதான் சரின்னு தன்ன தானே சமாதனம் சொல்லிகிறது.. நானும் அப்படிதான் யோசிச்சு, ஜெஸ்ஸிகிட்ட இருந்து கொஞ்சம் கொஞ்சமா விலக ஆரம்பிச்சேன். 

நாட்கள் நகர ஆரம்பித்தன.நட்பு வட்டாரமும் வளர ஆரம்பித்தது. கிரிக்கெட் , நைட் ஷோ , கேண்டீன் , கடைசி பெஞ்சில் உட்கார்ந்து கலாய்ப்பது என்று கலகலப்பாக முதல் செமஸ்டர் கழிந்தது. ஜெஸ்ஸியை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டார்கள் என்றே தான் சொல்ல வேண்டும். அவளும் அதிகம் பேசுவதை தவிர்த்தாள். நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் , அது வாலை ஆடிக்கிட்டு குப்பமேட்டுக்கு போகும் , இந்த பழமொழி நாய்க்கு மட்டும் இல்ல, நம்ம மனசுக்கும் பொருந்தும். குறிப்பா அந்த மனசுக்குள்ள ஒரு பொண்ணு இருந்தா நல்லாவே பொருந்தும்.  காதல் இல்ல , வெறும் இன்பாக்சுவேசன் என்றெல்லாம் சொன்னாலும், லேப் கிளாசில் அவ்வப்போது அவளது அருகாமையில் இருக்கையில் ஒரு இனம் புரியாத சுகம் இருந்ததென்னவோ உண்மை தான்.

அப்படியே நாட்கள் சென்று இருந்தால் எவ்வளோ நல்லா இருந்து இருக்கும். காலேஜ் முடிச்சு, வேளைக்கு போய், அரேன்ஜிடு மேரேஜ் பண்ணி இருப்பேன். இப்படி உக்காந்து என்னோட கதையை சொல்லி உங்களை போர் அடிக்க வேண்டிய அவசியமும் இருந்து இருக்காது. என்ன பண்றது, நம்ம நெனைக்கிற மாதிரியே எல்லாம் நடந்துச்சுனா வாழ்க்கைல சுவாரசியத்துக்கு இடமே இல்லாம போய்டும் இல்லையா?

செகண்ட் செமஸ்டர் அப்படி தான் ஆரம்பிச்சது. டிவி ப்ரோக்ராம் பத்தி மட்டுமே தெரிஞ்ச என்னை போய் கம்ப்யூட்டர்ல ப்ரோக்ராம் செய்ய சொன்ன எப்படி? அந்த கொடுமையை பற்றி ஏற்கனவே இங்க நிறைய பொலம்பி இருக்கேன். 

சீனியரிடம் நாங்கள் காப்பி அடிக்கும் ப்ரோக்ராமை, மறுநாள் பெண்கள் காப்பி அடிப்பது நடைமுறை வழக்கம். ஒரு நாள் லேட் ஆனதால், ஜெஸ்ஸியால் முழுவதுமாக காப்பி அடிக்க இயலவில்லை. 

"ஹேய் கார்த்திக். உன்னோட நோட் கொஞ்சம் தாயேன், சீக்கிரம் எழுதிட்டு தரேன்

"நீ கேட்டால் எனது இதயம் மட்டுமல்ல, என்னையே தருவேன், இதை தர மாட்டேனா?" என்று வழக்கம் போல வாய் வரை வந்த வார்த்தைகளை முழுங்கிவிட்டு "இந்தா" மட்டும் பதிலாக வந்தது.

அன்றிரவு கார்த்தியின் செல்லிடபேசியில் அந்த குறுஞ்செய்தி - "தேங்க்ஸ் பார் யுவர் டைமிலி ஹெல்ப் இன் கம்ப்யூட்டர் லேப் - ஜெஸ்ஸி ". இன்றளவும் அவனது saved folder இல் பத்திரமாக உறங்கிக்கொண்டு இருக்கிறது.

மெசேஜை பார்த்த கார்த்தி ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்தான். காரணம் - 1ஜெஸ்ஸிகிட்ட என்னோட போன் நம்பர் இருக்கு. 2. அவ எனக்கு மெசேஜ் பண்ணி இருக்கா. ஊரை கூட்டி கத்த வேண்டும் போல் இருந்தது. தலை கால் புரியாத உற்சாகத்தில் மொக்கையாக ஒரு பதில் அனுப்பினான். 

"தேங்க்ஸ் பார் தி தேங்க்ஸ்". இந்த வரலாற்று சிறப்புமிக்க பதிலுக்கு பொண்ணுங்க ஹாஸ்டலே விழுந்து விழுந்து சிரிச்சதா, ஜெஸ்ஸி சொல்லி தெரிய வந்தது.

இப்படிதான் எங்களோட நட்பு ஆரம்பிச்சது. லேப்ல எனக்கு அவ viva சொல்லி தர ஆரம்பிச்சா. ஒரு நாள் அவுட்புட் காட்ட வேண்டிய கட்டாயத்துல அவசர அவசரமா ப்ரோக்ராம் அடிச்சிட்டு இருந்த வேளை, கரண்ட் போய்டுச்சு.

"ஹேய்கார்த்திக், 'சேவ்' பண்ணிடியா ??" - ஜெஸ்ஸி 

"சனிக்கிழமை தான் ஷேவ் பண்ணினேன்" - யோசிக்காமல் பதில் வந்தது.

"லூசு, லூசு. ப்ரோக்ராம் 'சேவ்' பண்ணிடியானு கேட்டேன்" - சிரித்துக் கொண்டே கேட்டாள் . அவள் மட்டுமல்ல, மொத்த வகுப்புமே. இப்படி தான் எங்க நட்பு வளர்ந்தது. சில சமயம், அழகான பொண்ணுங்களுக்கு இப்படி வெகுளியா இருக்கிற பசங்கள தான் பிடிக்குமோன்னு கூட தோணும். ஜெஸ்ஸி பாஷைல சொல்லனும்னா 'லூசு' பசங்க.

விதி கம்ப்யூட்டர் லேப் மட்டுமில்லாமல் வொர்க்ஷாப் லேப்பிலும் விளையாட ஆரம்பித்தது. செமஸ்டர் முடியும் தருவாயில் ரெகார்ட் நோட் தொலைந்து போக, புது நோட் வாங்கி அனைத்தையும் எழுத சோம்பேறித்தனம் என்பதால் தேடிப்பார்க்க லேப் பக்கம் சென்றேன். அங்கே வாசலில் ஜெஸ்ஸி. எப்போதும் அவளை சுற்றி இருக்கும் கூட்டம் இல்லாமல் தனிமையில். 

"என்ன இங்க?" ஒரு புன்முறுவலோடு என்னை வரவேர்த்தாள். 

"இல்ல .. என்னோட ரெகார்ட் காணாம போய்டுச்சு. அதான் தேடி பாக்கலாம்னு."

"ஓ!! உன்னோட ரெகார்ட்டும் காணமல் போச்சா? என்னோடதும் தான்." 

விதியின் திருவிளையாடல் என்றே தான் தோன்றியது. இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் எங்களை அடிக்கடி சந்திக்க வைத்தது. என்னோட அதிர்ஷ்டம்ன்னு சொல்றதா இல்ல விதியோட விளையாட்டுன்னு சொல்றதா. நான் கொடுத்துவச்சவன்னு மட்டும் தெரிஞ்சுச்சு.

மாலைபொழுதில் கதிரவன் இளஞ்சிவப்பு வண்ணத்தை வானில் பூசிக்கொண்டிருக்க,  இயற்கையின் அழகை தனது புன்னகையால் இன்னும் மெருகேற்றி கொண்டிருந்தாள் ஜெஸ்ஸி. இதை விட காதலை வெளிபடுத்த சிறந்த சந்தர்ப்பம் அமையாது என்றெண்ணி சொல்லிவிட தீர்மானித்தேன். 

அப்போது தான் என் மண்டைக்கு உரைத்தது, இப்போ தான் நட்பு வளர ஆரம்பிச்சு இருக்கு.. இப்போ இத சொல்ல போய் உள்ளதும் போச்சுனா? வெண்ணை திரண்டு வர்ற நேரத்துல பானைய உடைச்ச கதையா ஆகிவிட கூடாது. இன்னும் 2 வருஷம் பொறுமையா இருந்து, நட்பை வளர்த்து, அது கனிந்து காதலாகும் வரை வெயிட் பண்ணி அப்பறம் சொல்லிக்கலாம் என்று முடிவு பண்ணினேன்.


வொர்க்ஷாபில் இருந்து ஹாஸ்டல் வரை பேசிக்கொண்டே வந்தோம். அர்த்தமற்ற பல விஷயங்கள் பேசினோம். சில சமயங்களில் பேசுவதை கேட்டால் "இவளோ முட்டாளா கூட யாராவது பேச முடியுமா ?" என்றெல்லாம் யோசிக்க வைத்தாள். அந்த சந்திப்பு, பெண்கள் விடுதியில் பலரிடம்  சந்தேங்களை எழுப்பிய விஷயமும் அவள் சொல்லி தான் தெரிய வந்தது.

நட்பு "குட் மார்னிங்" , "குட் நைட்" என்ற அளவிற்கு வளர்ந்தது. இருந்தாலும் என்னிடத்தில் பழகியதை காட்டிலும் மற்றவரிடத்தில் சற்று ஒதுங்கியே இருந்தாள். ஒதுக்கப்பட்டு இருந்தாள் என்று சொன்னால் கூட சரியாக தான் இருக்கும். நண்பர்கள் கடலை என்றார்கள், நான் நட்பு என்றேன், மனதோ காதல் என்றது. 

அந்த நட்பிற்கும் விதி அதற்கும் ஒரு நாள் குறித்து இருந்தது. "ரக்ஷா பந்தன்". ஆம், தனக்கு புடிச்ச பையனை அண்ணன் ஆக்குற பழக்கம் போய், தன்னை புடிச்சவனை அண்ணன் ஆக்கி இன்பம் காணும் நாள். பசங்களுக்கும் இந்த மாதிரி ஒரு நாள் இருந்தா எவளோ அருமையா இருந்து இருக்கும். அப்படி ஒரு திருநாளில் தான் ஜெஸ்ஸி 'ராக்கியோடு' வகுப்பறைக்குள்ள நுழைந்தாள்.

குறும்பாய் சிரித்துகொண்டே என்னை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். "மச்சி, நான் அன்னிக்கே சொல்லல, இந்த பொண்ணுங்களே இப்படி தான்டா. இனிமேல் எவன் எவனோ உன்ன மச்சானு சொல்லி உறவு கொண்டாட போறானுங்க பாரு ", ஜெகநாதன் கலாய்கவே ஆரம்பித்து விட்டான்.

"நம்ம கிளாஸ்ல இருக்கற எல்லா பொண்ணுங்களையும் என்னோட தங்கச்சியா ஏத்துகிறேன். உன்னை தவிர. ஐ டோன்ட் வான்ட் டு பி யுவர் பிரதர் ஜெஸ்ஸி". மனதிற்குள் வேண்டிக்கொண்டேன்.

தொடரும்..

Technorati Tags :  ,     , 

Read more ...