அல்லும் பகலும்
வேலையை தவிர்த்து
வேறேதும் செய்யாது,
வீட்டிற்கும் அலுவலகத்திற்கும்

செக்குபோல் சுழலும்
வாலிப வாழ்கையின்
வசந்தமற்ற மற்றுமொரு
வழக்கமான மாலைபொழுதினில்

கதிரவன் கரைய
கார்முகில் வாய்பிளந்து
பொழிகிறது வான்
ஜன்னலோரம் நான்.

முகத்தில் அடித்தது
மழையின் சாரல்கள்
மனதை நனைத்தது
ஞாபகத் தூறல்கள்.

அனுதினமும் முகநூலில்
அளவளாவும் அன்பர்,
பின்னிரவு தாண்டியும்
அலைபேசும் நண்பரென

சுற்றமும் சூழலும்
தன்னிலை மறந்து
தத்தம் காதலியிடம்
நித்தம் கதைக்க,

நானோ தனியாக
தனிமைக்குத் துணையாக
உன்வரவை எதிர்நோக்கி
மௌனமாய் காத்திருக்க ...

காதலிக்காக கால்வலிக்க
காத்திருப்பது சுகமெனில்
காதலுக்காக காத்திருப்பது
அதனினும் சுகம்தானே ...

அடக்கத்திலும் அன்பிலும்
அத்தை மகளென,
பாசத்திலும் பண்பிலும்
பால்ய சிநேகிதியென,

கனிவிலும் கண்டிப்பிலும்
கல்லூரித் தோழியென,
அழகிலும் அறிவிலும்
அலுவலக நண்பியென

பரிட்சயமான முகங்களில்
அவ்வப்பொழுது தென்பட்டு
நீதானோ என்னவளென்று
முடிவெடுக்கும் முன்னரே
மறைந்துபோகும் உன்னை

என்றாவது சந்திப்பேன்
என்னும் நம்பிக்கையில்
நிதமும் தேடிக்கொண்டிருக்கிறேன்
கவிதையிலும் கற்பனையிலும் ...

~பிரேம்

Read more ...