டிஸ்கி : இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. சுவாரஸ்யத்திற்காகவும், குஜல்டிக்காகவும் சில பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.

இதுவரை ...

3.KARTHICK TALKS TO JESSI

இனி ...

4. ஐ டோன்ட் வான்ட் டு பி யுவர் பிரதர் ஜெஸ்ஸி !!!

"ஓடிப்போலாமா ???" 

இதனை சற்றும் எதிர்பாராத ஜெஸ்ஸி, எதுவும் சொல்லாமல் கோபமாக வகுப்பறையை விட்டு வெளியேறினாள். ஜெகநாதனும், முகமதுவும் தங்களுக்கு இடையே நடந்த  பெட்டிங் விளையாட்டு இப்படி வினையில் போய் முடியும் என்று நினைத்து இருக்க மாட்டார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் ஜெகநாதணிற்கு சீனியரிடம் இருந்து அழைப்பு வந்தது. திரும்பி வந்தவன் மிரட்டி அனுப்பியதாக மட்டும் கூறினான். அடி விழுந்ததா இல்லையா, அவனுக்கு மட்டுமே வெளிச்சம்.

விளையாட்டுன்னு தெரிஞ்சும் ஜெஸ்ஸி அப்படி பண்ணி இருக்க கூடாது தான்.  இருந்தாலும் ஒரு பொண்ணுகிட்ட போய் இப்படியா கேட்கறது, அப்படின்னு நீங்க நினைக்கிற மாதிரிதான் நானும் நெனச்சேன்.. ஆனா திமிரு , பசங்க , கெத்து , ரோஷம் , மரியாதை அப்படி இப்படின்னு என்ன என்னவோ பேசி ஜெய் எங்களை பிரைன் வாஷ் பண்ணிட்டான்.. 

ஒரு "ஓடிப்போலாமாவில்" இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கு என்றால் "ஐ லவ் யு " மட்டும் சொல்லி இருந்தால் ?? நினைச்சு பார்க்கவே பயமாக இருந்தது.. நமக்கும் இது ஒத்துவராத மாதிரி தான் தோணுது என்று எண்ணத் தொடங்கினான் கார்த்திக். பசங்க கிட்ட இது தான் ஒரு பிரச்சனை .. எதையுமே தெரிஞ்சுக்காம தாங்களே ஒரு முடிவு பண்ணிட்டு அதுதான் சரின்னு தன்ன தானே சமாதனம் சொல்லிகிறது.. நானும் அப்படிதான் யோசிச்சு, ஜெஸ்ஸிகிட்ட இருந்து கொஞ்சம் கொஞ்சமா விலக ஆரம்பிச்சேன். 

நாட்கள் நகர ஆரம்பித்தன.நட்பு வட்டாரமும் வளர ஆரம்பித்தது. கிரிக்கெட் , நைட் ஷோ , கேண்டீன் , கடைசி பெஞ்சில் உட்கார்ந்து கலாய்ப்பது என்று கலகலப்பாக முதல் செமஸ்டர் கழிந்தது. ஜெஸ்ஸியை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டார்கள் என்றே தான் சொல்ல வேண்டும். அவளும் அதிகம் பேசுவதை தவிர்த்தாள். நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் , அது வாலை ஆடிக்கிட்டு குப்பமேட்டுக்கு போகும் , இந்த பழமொழி நாய்க்கு மட்டும் இல்ல, நம்ம மனசுக்கும் பொருந்தும். குறிப்பா அந்த மனசுக்குள்ள ஒரு பொண்ணு இருந்தா நல்லாவே பொருந்தும்.  காதல் இல்ல , வெறும் இன்பாக்சுவேசன் என்றெல்லாம் சொன்னாலும், லேப் கிளாசில் அவ்வப்போது அவளது அருகாமையில் இருக்கையில் ஒரு இனம் புரியாத சுகம் இருந்ததென்னவோ உண்மை தான்.

அப்படியே நாட்கள் சென்று இருந்தால் எவ்வளோ நல்லா இருந்து இருக்கும். காலேஜ் முடிச்சு, வேளைக்கு போய், அரேன்ஜிடு மேரேஜ் பண்ணி இருப்பேன். இப்படி உக்காந்து என்னோட கதையை சொல்லி உங்களை போர் அடிக்க வேண்டிய அவசியமும் இருந்து இருக்காது. என்ன பண்றது, நம்ம நெனைக்கிற மாதிரியே எல்லாம் நடந்துச்சுனா வாழ்க்கைல சுவாரசியத்துக்கு இடமே இல்லாம போய்டும் இல்லையா?

செகண்ட் செமஸ்டர் அப்படி தான் ஆரம்பிச்சது. டிவி ப்ரோக்ராம் பத்தி மட்டுமே தெரிஞ்ச என்னை போய் கம்ப்யூட்டர்ல ப்ரோக்ராம் செய்ய சொன்ன எப்படி? அந்த கொடுமையை பற்றி ஏற்கனவே இங்க நிறைய பொலம்பி இருக்கேன். 

சீனியரிடம் நாங்கள் காப்பி அடிக்கும் ப்ரோக்ராமை, மறுநாள் பெண்கள் காப்பி அடிப்பது நடைமுறை வழக்கம். ஒரு நாள் லேட் ஆனதால், ஜெஸ்ஸியால் முழுவதுமாக காப்பி அடிக்க இயலவில்லை. 

"ஹேய் கார்த்திக். உன்னோட நோட் கொஞ்சம் தாயேன், சீக்கிரம் எழுதிட்டு தரேன்

"நீ கேட்டால் எனது இதயம் மட்டுமல்ல, என்னையே தருவேன், இதை தர மாட்டேனா?" என்று வழக்கம் போல வாய் வரை வந்த வார்த்தைகளை முழுங்கிவிட்டு "இந்தா" மட்டும் பதிலாக வந்தது.

அன்றிரவு கார்த்தியின் செல்லிடபேசியில் அந்த குறுஞ்செய்தி - "தேங்க்ஸ் பார் யுவர் டைமிலி ஹெல்ப் இன் கம்ப்யூட்டர் லேப் - ஜெஸ்ஸி ". இன்றளவும் அவனது saved folder இல் பத்திரமாக உறங்கிக்கொண்டு இருக்கிறது.

மெசேஜை பார்த்த கார்த்தி ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்தான். காரணம் - 1ஜெஸ்ஸிகிட்ட என்னோட போன் நம்பர் இருக்கு. 2. அவ எனக்கு மெசேஜ் பண்ணி இருக்கா. ஊரை கூட்டி கத்த வேண்டும் போல் இருந்தது. தலை கால் புரியாத உற்சாகத்தில் மொக்கையாக ஒரு பதில் அனுப்பினான். 

"தேங்க்ஸ் பார் தி தேங்க்ஸ்". இந்த வரலாற்று சிறப்புமிக்க பதிலுக்கு பொண்ணுங்க ஹாஸ்டலே விழுந்து விழுந்து சிரிச்சதா, ஜெஸ்ஸி சொல்லி தெரிய வந்தது.

இப்படிதான் எங்களோட நட்பு ஆரம்பிச்சது. லேப்ல எனக்கு அவ viva சொல்லி தர ஆரம்பிச்சா. ஒரு நாள் அவுட்புட் காட்ட வேண்டிய கட்டாயத்துல அவசர அவசரமா ப்ரோக்ராம் அடிச்சிட்டு இருந்த வேளை, கரண்ட் போய்டுச்சு.

"ஹேய்கார்த்திக், 'சேவ்' பண்ணிடியா ??" - ஜெஸ்ஸி 

"சனிக்கிழமை தான் ஷேவ் பண்ணினேன்" - யோசிக்காமல் பதில் வந்தது.

"லூசு, லூசு. ப்ரோக்ராம் 'சேவ்' பண்ணிடியானு கேட்டேன்" - சிரித்துக் கொண்டே கேட்டாள் . அவள் மட்டுமல்ல, மொத்த வகுப்புமே. இப்படி தான் எங்க நட்பு வளர்ந்தது. சில சமயம், அழகான பொண்ணுங்களுக்கு இப்படி வெகுளியா இருக்கிற பசங்கள தான் பிடிக்குமோன்னு கூட தோணும். ஜெஸ்ஸி பாஷைல சொல்லனும்னா 'லூசு' பசங்க.

விதி கம்ப்யூட்டர் லேப் மட்டுமில்லாமல் வொர்க்ஷாப் லேப்பிலும் விளையாட ஆரம்பித்தது. செமஸ்டர் முடியும் தருவாயில் ரெகார்ட் நோட் தொலைந்து போக, புது நோட் வாங்கி அனைத்தையும் எழுத சோம்பேறித்தனம் என்பதால் தேடிப்பார்க்க லேப் பக்கம் சென்றேன். அங்கே வாசலில் ஜெஸ்ஸி. எப்போதும் அவளை சுற்றி இருக்கும் கூட்டம் இல்லாமல் தனிமையில். 

"என்ன இங்க?" ஒரு புன்முறுவலோடு என்னை வரவேர்த்தாள். 

"இல்ல .. என்னோட ரெகார்ட் காணாம போய்டுச்சு. அதான் தேடி பாக்கலாம்னு."

"ஓ!! உன்னோட ரெகார்ட்டும் காணமல் போச்சா? என்னோடதும் தான்." 

விதியின் திருவிளையாடல் என்றே தான் தோன்றியது. இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் எங்களை அடிக்கடி சந்திக்க வைத்தது. என்னோட அதிர்ஷ்டம்ன்னு சொல்றதா இல்ல விதியோட விளையாட்டுன்னு சொல்றதா. நான் கொடுத்துவச்சவன்னு மட்டும் தெரிஞ்சுச்சு.

மாலைபொழுதில் கதிரவன் இளஞ்சிவப்பு வண்ணத்தை வானில் பூசிக்கொண்டிருக்க,  இயற்கையின் அழகை தனது புன்னகையால் இன்னும் மெருகேற்றி கொண்டிருந்தாள் ஜெஸ்ஸி. இதை விட காதலை வெளிபடுத்த சிறந்த சந்தர்ப்பம் அமையாது என்றெண்ணி சொல்லிவிட தீர்மானித்தேன். 

அப்போது தான் என் மண்டைக்கு உரைத்தது, இப்போ தான் நட்பு வளர ஆரம்பிச்சு இருக்கு.. இப்போ இத சொல்ல போய் உள்ளதும் போச்சுனா? வெண்ணை திரண்டு வர்ற நேரத்துல பானைய உடைச்ச கதையா ஆகிவிட கூடாது. இன்னும் 2 வருஷம் பொறுமையா இருந்து, நட்பை வளர்த்து, அது கனிந்து காதலாகும் வரை வெயிட் பண்ணி அப்பறம் சொல்லிக்கலாம் என்று முடிவு பண்ணினேன்.


வொர்க்ஷாபில் இருந்து ஹாஸ்டல் வரை பேசிக்கொண்டே வந்தோம். அர்த்தமற்ற பல விஷயங்கள் பேசினோம். சில சமயங்களில் பேசுவதை கேட்டால் "இவளோ முட்டாளா கூட யாராவது பேச முடியுமா ?" என்றெல்லாம் யோசிக்க வைத்தாள். அந்த சந்திப்பு, பெண்கள் விடுதியில் பலரிடம்  சந்தேங்களை எழுப்பிய விஷயமும் அவள் சொல்லி தான் தெரிய வந்தது.

நட்பு "குட் மார்னிங்" , "குட் நைட்" என்ற அளவிற்கு வளர்ந்தது. இருந்தாலும் என்னிடத்தில் பழகியதை காட்டிலும் மற்றவரிடத்தில் சற்று ஒதுங்கியே இருந்தாள். ஒதுக்கப்பட்டு இருந்தாள் என்று சொன்னால் கூட சரியாக தான் இருக்கும். நண்பர்கள் கடலை என்றார்கள், நான் நட்பு என்றேன், மனதோ காதல் என்றது. 

அந்த நட்பிற்கும் விதி அதற்கும் ஒரு நாள் குறித்து இருந்தது. "ரக்ஷா பந்தன்". ஆம், தனக்கு புடிச்ச பையனை அண்ணன் ஆக்குற பழக்கம் போய், தன்னை புடிச்சவனை அண்ணன் ஆக்கி இன்பம் காணும் நாள். பசங்களுக்கும் இந்த மாதிரி ஒரு நாள் இருந்தா எவளோ அருமையா இருந்து இருக்கும். அப்படி ஒரு திருநாளில் தான் ஜெஸ்ஸி 'ராக்கியோடு' வகுப்பறைக்குள்ள நுழைந்தாள்.

குறும்பாய் சிரித்துகொண்டே என்னை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். "மச்சி, நான் அன்னிக்கே சொல்லல, இந்த பொண்ணுங்களே இப்படி தான்டா. இனிமேல் எவன் எவனோ உன்ன மச்சானு சொல்லி உறவு கொண்டாட போறானுங்க பாரு ", ஜெகநாதன் கலாய்கவே ஆரம்பித்து விட்டான்.

"நம்ம கிளாஸ்ல இருக்கற எல்லா பொண்ணுங்களையும் என்னோட தங்கச்சியா ஏத்துகிறேன். உன்னை தவிர. ஐ டோன்ட் வான்ட் டு பி யுவர் பிரதர் ஜெஸ்ஸி". மனதிற்குள் வேண்டிக்கொண்டேன்.

தொடரும்..

Technorati Tags :  ,     , 

Read more ...