கல்லூரி வாழ்வில் கண்டு, கேட்டு , பார்த்த , பழகிய சம்பவங்களின் தொகுப்பே இந்த கதையின் மூலாதாரம்...

சுவாரஸ்யத்திற்காக எனது கற்பனை குதிரை கதை முழுவதும் ஓடவிடப்பட்டு இருக்கிறது .. குதிரை நல்லா ஓடி இருக்கா, இல்ல சுத்தமா ஓடலையானு படிச்சுட்டு சொல்லவும் ..

டிஸ்கி : இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. சுவாரஸ்யத்திற்காகவும், குஜல்டிக்காகவும் சில பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.

நட்பு எனப்படுவது யாதெனில்
---------------------------------

விடிஞ்சா கல்யாணம் .. இன்னும் ரெடி ஆக 3 மணி நேரம் கூட இல்லை ... மணப்பெண் அலங்காரம் ஆரம்பித்து இருக்க கூடும் .. தூங்க மனம் வராமல் உலவி கொண்டு இருந்தான் கார்த்திக்....3 மணி நேரத்துல என்ன பண்ணலாம் .. படுத்து தூங்கலாம் ? பசங்க ரூம்க்கு போய் மொக்க போடலாம் ? பழைய சம்பவங்களை நினைத்து அசை போடலாம் ... 

 

"பேசின வார்த்தைகள், ஏன் அவ சிரிச்ச சத்தங்கள் கூட மனசுக்குள்ள அப்படியே இருக்கு.மறக்கவே முடியாத தருணங்கள் அவை...இப்போ நெனச்சு பார்த்தா கூட கனவு மாதிரி தான் தோணுது .. ஏதோ நேத்து தான் மீட் பண்ணின மாதிரி இருக்கு ... இட் ஜஸ்ட் ஹேப்பண்ட் ... அவ பேர் ஜெஸ்ஸி .. அவ்ளோ அழகு. க்ளாஸி. படிச்சவ. வெல் ரெட். அவகிட்ட ஒரு ஸ்டைல் இருக்கு. செக்ஸி டூ." 


1. கோவை மாநகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது !!
----------------------------------------------------------------

"இந்த பஸ் லாலி ரோடு போகுமா?"


ஆமாம் , இல்லை என இவ்விரண்டுக்கும் பொதுவாக தலையசைத்த கண்டக்டரை "ஆரம்பமே சரி இல்லையே" என்று புலம்பிக்கொண்டே குழப்பத்துடன் பார்த்தான் கார்த்திக்.. "பாரதி பார்க், பால் கம்பெனி, லாலி ரோடு, அக்ரி காலேஜ், வடவள்ளி .. போலாம் ரைட்" .. என்று விளிக்க பஸ்சில் ஏறிக்கொண்டான். புகையை கக்கிக்கொண்டே கிளம்பிய 1C
பஸ்ஸோடு, கார்த்தியின் அடுத்த நான்கு வருட வாழ்க்கை பயணம் ஆரம்பித்தது.



4 ரூபாய் கொடுத்து வாங்கிய டிக்கெட்டை மடித்துக்கொண்டு ஜன்னல் சீட்டில் உக்கார்ந்தான். தாய் குலம் முன்பாதியிலும், பசங்க எல்லாரும் பின்பாதியிலும் அமர்ந்து இருந்த வழக்கம் விசித்திரமாய் இருந்தது. பேருந்தை நோட்டம் விட்டுக்கொண்டு இருந்த கார்த்தியின் பார்வை 2வது சீட்டில் இருந்த மஞ்சள் சுடிதார் மீது விழுந்தது. பிறை நிலாவை ஒத்த சற்றே சிறிய பொட்டு, ஜன்னல் காற்று அவளது கேசத்தோடு விளையாடி கொண்டிருக்க, "சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் சிறு இசையும்"  என கோவை சூரியன் FM வழியே இளையராஜா தன் பணியை செவ்வனே செய்து கொண்டு இருந்தார்."மாப்ள , கோவை பொண்ணுங்க எல்லாம் நம்ம ஊர் மாதிரி கிடையாது, செம்ம அழகா இருப்பாளுங்க.. அவுங்க ரேஞ்சே வேற. கொடுத்து வச்சவன் மச்சான் நீ ..". சபரி சொன்னது முற்றிலும் உண்மை என்பதை அந்த மஞ்சள் சுடிதார் உணர்த்தி கொண்டிருந்தாள்.

                         "அவளது நெற்றியில் இன்று,
                          முழு நிலா,
                          ஊரில் இன்று
                          அம்மாவசை."


என்று மொக்கையாக கவிதை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தவனை, "லாலி ரோடு ஸ்டாப் எல்லாம் இறங்கு" என்ற குரல் கலைத்தது. மஞ்சள் சுடிதாரை "வட போச்சே" பீலிங்கோடு பார்த்துகொண்டு இறங்கினான் .A1 பிரியாணி வாசனை வீதி வரை வந்து அழைப்பிதழ் கொடுத்து கொண்டு இருக்க, "வாங்க பாஸ், என்ன சாப்டறிங்க?" என்று அன்போடு விசாரித்தவரிடம்," 'ஜி.சி.டி'க்கு எப்படி போகணும் ? " என்று வினா எதிர் வினாதல் விடை அளித்தான்.
 




2 கி.மீ நடந்து இருப்பான், காலேஜ் தென்பட்டது .. பெரிய நுழைவாயில், இருபுறமும் அணிவகுத்து நின்ற மரங்கள், தார் ரோடு, எல்லாமே புதுசா இருந்துச்சு.. சீனியர்களின் "சிக்கிடாண்டா ஜூனியர்" பார்வைகளை கடந்து ஆடிட்டோரியத்தை அடைந்தான் கார்த்திக். புதிய முகங்கள், ஆங்கில குரல்கள், பள்ளி நண்பர்கள் கூட்டம் என அனைத்தையும் தாண்டி பசங்கள
விட பொண்ணுங்க கூட்டம் தான் ஜாஸ்தி என்று ஆண்ட்ரோஜென் மூளைக்கு சிக்னல் அனுப்பியது..


ஒரு வழியாக உள்ளே நுழைந்து Admission Form வாங்கி படிவத்தை பூர்த்தி செய்தான். "டியூஷன்  பீஸ் எவ்வளோ போடறதுன்னு தெரிலையே". அருகில் விசாரிக்க, 


"18,500/-,"ம்ம்ம் இந்த இடத்துல போடுங்க , அப்படியே உங்க கையெழுத்த இங்க போட்ருங்க .. ஹோ , நீங்களும் I.T தானா ? நானும் I.T தான்." என்று ஆரம்பித்தவனை,


"Sharaafath !!! உங்க அம்மா கூப்பிடுறாங்க" என்ற பெண்ணின் குரல் திசை திருப்பியது .. அட்மிசன் முழுவதும் இதே காட்சி அடிக்கடி ஒளிபரப்பு ஆகிக்கொண்டு இருந்தது ... "ஸ்கூல்லயே கரெக்டு பண்ணிட்டியா ?" என்று வாய் வரை வந்த கேள்வியை கட்டுப்படுத்திக்கொண்டான் கார்த்திக். அட்மிசன் முடிய 4 மணி ஆகிவிட , பெட்டியை தூக்கிகொண்டு பொன்னியாறு ஹாஸ்டல் நோக்கி நடந்தான்.


ரூம் நம்பர் 13. பொருட்கள் அடுக்கி வைக்க பட்டு இருந்தது.."ரூம்மேட்ஸ் ஏற்கனவே வந்துட்டாங்க போல" என்று எண்ணி உள்ளே சென்று தனது துணிமணிகளை அடுக்க ஆரம்பித்தான்.


"ஸாரி பாஸ் .. வெளில டீ சாப்பிட போய் இருந்தோம். இப்போ தான் வந்தீங்களா ?" .


"ஆமா ரொம்ப லேட் ஆக்கிடானுங்க" என்றான் கார்த்திக் சலிப்புடன் .


"விடுங்க பாஸ் .. இவுங்க எப்பவுமே இப்டித்தான்.. நான் ஜெயகுமார் , சொந்த ஊர் பெத்தநாயகன்பாளையம் , சேலம் பக்கம்.."


"நான் கார்த்திக்.. நம்மளுது மேட்டுநீரையத்தான் .. மதுர பக்கம் ... நீங்க திருநெல்வேலியா ?" மற்றவரை பார்த்து கேட்டான் கார்த்திக்..


"தென்காசி பக்கதுல கடபோகாதி .. திருநெல்வேலில இருந்து 1.30 மணி நேரம் .."


"உங்க பேரு?" - கார்த்திக் .
 

"விக்னேஷ்".   


"பார்த்தா ஸ்கூல் பசங்க மாதிரி இருக்கானுங்க ... இவனுங்க கூட தான் இருக்கணும்னு எழுதி இருக்கு.." என்று மனதிற்குள் சிரித்தபடியே தனது அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தான் கார்த்திக்.

                                                                             தொடரும் ...

Technorati Tags : , , , , , ,

Read more ...